Published Date: August 13, 2025
CATEGORY: CONSTITUENCY

தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் மதுரையில் முதியோர் மாற்றுத்திறனாளிகளின் இல்லம் தேடி சென்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரேஷன் பொருட்களை செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இதை அடுத்து தமிழக தகவல் தொழில்நுட்பவியல் எண்மச் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை சுப்பிரமணியபுரத்தில் முதியோர் மாற்றுத்திறனாளிகளின் இல்லம் தேடிச்சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.
மதுரை மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் முதியோர் மாற்று திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
70 ஆயிரம் பேர் பயன் பெறுவர்:
மதுரை மாவட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 70,311 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவர். ஒரு நியாய விலை கடைக்கு அதிகபட்சம் 60 குடும்ப அட்டைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாதத்தின் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நியாய விலை கடை பணியாளர்கள் இல்லம் தேடிசென்று முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
Media: Dinamani